Friday, May 3, 2024
Home Blog Page 13

யாழில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

யாழில் காணாமல் போன இளைஞன் ஒருவர் தோட்ட கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (15-12-2023) கோப்பாய் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய நிரோசன் என்பவரே சடலமாக கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வைத்திய நிபுணர்களின் ஓய்வுக்கான வயதெல்லை தொடர்பில் வெளியான தகவல் !

அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச சேவையில் பணிப்புரியும் வைத்திய நிபுணர்கள் அறுபது வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல மற்றும் கருணாரத்ன ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் ஆயம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பகுதியில் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் பொலிஸாருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே, வாகனத்தில் இருந்து 07 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களையும் வாகனம் மற்றும் கஞ்சாவையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

மழை காரணமாக மூன்று பாடசாலைகளுக்கு பூட்டு !

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதன்படி பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
மேலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் பாடசாலை மாணவிகளை ஹல்துமுல்ல தமிழ் உயர்தர பாடசாலைக்கும், மலடோல பாடசாலை மாணவிகளை ஹரன்காவ பாடசாலைக்கும் அனுப்பி வைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பணிப்பாளர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக உறுதியளிக்கும் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இந்த மோசடி குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு
அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி பணம் செலுத்தியவர்கள் இஸ்ரேலில் எந்தவொரு உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேலில் முறையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே தேவை என்று அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மாத்திரமே இந்தக் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (2023.12.07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை விநியோகிப்பதில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடிகள் !

நாட்டில் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடி சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அண்மைக் காலமாக பல்வேறு நபர்களால் மக்களுக்கு அன்பளிப்பு அல்லது கடன் வழங்குவதாக கூறி பண வசூல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, மக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும், சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தலா 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26,000 ரூபா பணத்துடன் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி 136,000 ரூபாவை பெற்று கூட்டுறவு வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், நேற்று (05) சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் – ஆண் என ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 70,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் மொணராகலை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதான சியம்பலாண்டுவ பிரதேசத்தை பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இரு சந்தேக நபர்களும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை அறிவித்துள்ளது.

யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ! முதியவரொருவர் அடித்து கொலை

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் யாழ் உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (19-11-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அம்மன் ஆலயத்தில் அசைவ மடை உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது!

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ் உற்சவமான இணுவில் பத்திரகாளியம்மனின் அறங்காவலர்கள் பண்டைய காலம் தொட்டு வருடா வருடம் அசைவ மடை உற்சவத்தினை நடாத்தி வருகின்றனர்.

பண்ணைப் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி !

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெற்ற விபத்து
முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இந்த விபத்தில் படு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.